உலகப் புகழ்பெற்றவர் கணிதமேதை ராமானுஜம். அவர் வாழ்ந்த காலத்தில் அவரைப்பற்றி அறிந்தவர்கள் கொஞ்சம். ஆனால் இன்றோ அப்படிப்பட்ட மேதை தமிழ்நாட்டில் பிறந்தவர் என்ற பெருமை கொண்டாடுபவர்கள் அனேகம். அவர் தமிழ்நாட்டிலுள்ள ஈரோட்டில் 1887 -ம் ஆண்டு டிசம்பர் 22-ம் நாள் பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் சீனிவாசன், தாயார் பெயர் கோமளத்தம்மாள்.
சிறு வயதாக இருந்தபோதே வீட்டில் எப்பொழுதும் பலவித கணிதப்புதிர்களை போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார். தனது 13 - வது வயதில் புதிய தேற்றங்களை கண்டறியத் தொடங்கினார். கல்லூரியில் சேர்ந்தபோது கணக்குப்பாடத்தில் மட்டும் மிகச்சிறப்புடன் மதிப்பெண்களைப் பெற்றார். இதர பாடங்களில் நாட்டமில்லாததால் தோல்வி அடைந்தார்.
1912 - ம் ஆண்டில் சென்னைத் துறைமுகப் பொறுப்புக்கழகத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். வேலையை குறைந்த நேரத்தில் முடித்துவிட்டு மீதி நேரத்தை கணித ஆராய்ச்சிக்கு செலவிட்டார். 1913 - ம் ஆண்டில் ராமானுஜம் தனது கணித ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்தவைகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹார்டி என்னும் பேராசிரியருக்கு அனுப்பிவைத்தார். அந்த பேராசிரியர்தான் பின்னாளி்ல் ராமானுஜம் அவர்களின் திறமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவராவார்.
பேராசிரியர் ஹார்டியின் அழைப்பின் பேரில் ராமானுஜம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று கணித ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். புதிது புதிதாக சமன்பாடுகளையும் தேற்றங்களையும் கண்டுபிடித்தார். 1918 - ம் வருடம் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் அவருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டிரினிட்டி கல்லூரியில் முக்கிய அங்கீகாரம் வழங்கப்பட்டது. ராமானுஜம் மூன்று நோட்டுகள் விட்டுச்சென்றுள்ளார், அதில் 4000 கணக்கு மற்றும் விடைகள் தரப்பட்டுள்ளன. பல பல்கலைக்கழகங்களில் இவற்றின் மீது ஆராய்ச்சி நடைபெறுகிறது. 1920 - ம் ஆண்டில் அவர் மறைந்த போது அவருக்கு வயது 32 தான்.அவர் கண்ட கணித முடிவுகள் இயற்பியல் மற்றும் கணினி இயல் துறைகளிலும் பயன்படத் தொடங்கியுள்ளன. இவருடைய கண்டுபிடிப்புகள் பல துறைகளி்ல் பயன்பட்டு வருகின்றன.
Ref தினத்தந்தி நாளிதழ். 24.12.12