வனங்களை காப்போம்

ஒவ்வொரு மரமும் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த படம் நமக்கு உணர்த்துகிறது. மரங்கள் நமக்கு எவ்வளவோ நன்மைகளை தருகிறது. அதாவது சுவாசிக்க ஆக்சிஜனை கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல உயிரினங்கள் வாழுமிடமாகவும் திகழ்கிறது. நமக்கு நிழலைக்கொடுக்கிறது. உண்ண உணவு, உடுத்த உடை, இப்படி நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை அனைத்திற்கும் தேவையானது மரமாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது. மழை பெறுவதற்கு மரம் இன்றியமையாததாகும். காற்றை சுத்தப்படுத்துகிறது. இப்படிப்பட்ட மரத்தை நாம் அழித்தால் நாம் நம்மையே அழித்துக்கொள்வது போன்றதாகும்.

***********************************************************************

வனம் இல்லையேல் மனித இனம் இல்லை

பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்
பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்
பத்து ஏரிகள் ஒரு புத்திரனை பெறுவதற்குச் சமம்
பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்
(எனவே ஒரு மரம் நடுவது பத்தாயிரம் கிணறுகள் வெட்டுவதற்கு சமம்)
பல மரம் செடி கொடிகள் சேர்ந்தது வனம். வனம் இல்லையேல் மழை இல்லை
மழை இல்லையேல் மனிதர்கள் இல்லை. எனவே அனைத்திற்கும் அடிப்படை வனம்
.
***********************************************************************************
ஒரு முறை உயிர் கொடுத்தாள் தாய்
ஒவ்வொரு நொடியும் உயிர் கொடுக்கிறது மரம்.
 
மனிதன் மரத்தை மறந்தால் தன்னையும் மறக்கிறான். அனைத்தையும் மறக்கிறான். பல மரங்கள் சேர்ந்தது காடு. இன்று காடுகள் இல்லையென்றால் ஏதும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. 
வனங்கள் அழிவதால் தாவரங்களும் விலங்குகளும் அழிகின்றன. மண் அரிமானம் ஏற்படுகிறது. மழை மற்றும் நீர் ஆதாரம் இல்லாமல் போகிறது. வறட்சி வேலையின்மை போன்றவை ஏற்படுகிறது. பல அரிய மூலிகைகள் அழிந்துவிடுகிறது. காற்றில் மாசுபாட்டின் தாக்கம் அதிகரிக்கிறது. காற்றின் ஈரப்பதம் குறைகிறது. காற்றில் தூசு புகை நச்சுப்பொருட்கள் அதிகரிக்கின்றது. வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பதால் பசுமைக்கூடார விளைவு ஏற்படுகிறது. வெப்பநிலை உயர்கிறது இதனால் துருவப்பகுதிகளில் பனிக்கட்டி உருகுதல் அதிகமாகிறது. கடல் மட்டம் உயர்கிறது.
எனவே இதன் பின்விளைவுகளை சற்று சிந்தித்து பார்க்கவேண்டும். நம் வனத்தை காக்கவேண்டும். இது நமது கடமை மட்டுமல்ல கட்டாயமும் கூட
.

**********************************************************************************


சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி. சுத்தம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாததாகும். ஆனால் இன்று இந்தியா முழுவதும் முழுமையான சுகாதாரம் இல்லை என்பது நிதர்சனமான உண்மையாகும். நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவரின்
கருத்து. 

அனைத்து உயிரினத்திற்கும் நீர் அடிப்படையான ஒன்றாகும். தொழிற்சாலை கழிவுகளும், மனித கழிவுகளும், ரசாயன பொருட்களும் நீர்நிலையில் கலக்கின்றன. இதனால் நீர் மாசுபடுகிறது. அனைத்து வகையான உயிரினத்திற்கும் உணவு வழங்குவது நிலமாகும். ஆனால் அந்த நிலத்தை இன்று பலவகையாக சீரழித்து வருகின்றோம் என்பதுதான் வேதனையான செய்தியாகும். பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதாலும், மண்ணில் புதைப்பதாலும் நிலம் மாசுபடுகிறது. இதேபோல் அனைத்து உயிரினத்திற்கும் முக்கியமானது காற்று. ஆனால் இன்று காற்று பெருமளவில் மாசுபடுகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு புகையின் மூலமும், டயர் போன்றவற்றை எரிப்பதன் மூலமும், வாகன புகையின் காரணமாகவும் இன்று நாம் சுவாசிக்கும் காற்று மாசுபடுகிறது.  இவ்வாறு மிகவும் முக்கியமான அவசியமான நீர், நிலம் மற்றும் காற்று போன்றவை இன்று மனித சமுதாயத்தால் மாசுபட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இன்று விவசாயம் பெரும்பாலும் அழிந்து வருகிறது. பெருகிவரும் மக்கள்தொகை காரணமாக விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுகிறது. மேலும் விவசாயத்தின் மூலம் போதிய லாபம் இல்லை என்பதாலும் விவசாயத்தை விரும்பவில்லை. இதனால் தற்போதைய சூழ்நிலையில் நமது நாட்டில் போதிய அளவு உணவுப்பொருட்கள் கிடைக்காத நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நிச்சயமாக உணவு பஞ்சம் ஏற்படும். இன்றைய சூழ்நிலையில் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகள் இருந்தாலும் சுத்தமான சுகாதாரமான பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். நமது நாட்டின் பெருஞ்செல்வம் இயற்கையே. 

இயற்கை வளமான காடுகளில் உள்ள மரங்களை பெரும்பாலும் வெட்டி விடுவதால் விலங்குகள் பறவைகள் போன்ற பல்வேறு உயிரினங்களும் அழிந்து வருகின்றன. பெருமளவில் காடுகளை அழிப்பதால் நமது நாட்டின் இயற்கை வளம் அழிந்து வருகிறது. இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் தனது வாழ்வில் கட்டாயம் மரங்களை நடவேண்டும். பிளாஸ்டிக்கை ஒழிக்கவேண்டும். இயற்கையை நேசிக்கவேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினர் இயற்கையை நேசித்து ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரை சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு உதவிடவேண்டும். வனங்களை காக்கவேண்டும். வாழ்வினை வளமாக்கிக்கொள்ளவேண்டும்.