சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம்
8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட
தொழிற்புரட்சியின் காரணமாக, பெண்கள் தொழிற்சாலைகளில் அடியெடுத்து வைத்தபோது
எண்ணற்ற பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. பெண்களின் பிரச்சினைகள் குறித்து, முதன் முதலில் கோரிக்கை சாசனம் ஒன்று 1866 இல் உலகத் தொழிலாளர்கள் சங்கத்தில் முன்மொழியப்பட்டது.
1870 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதியன்று நியூயார்க் நகரில், பஞ்சாலைகளில் 16
மணி நேரம் உழைத்து வந்த ஆயிரக்கணக்கான பெண்கள், வீதியிலிறங்கி 8 மணி வேலை
கோரி, வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்தினர். அந்த தினத்தை சர்வதேச
உழைக்கும் பெண்கள் தினமாக அனுசரிக்க 1910ல் கோபன் ஹேகனில் நடைபெற்ற
சோஷலிஸ்ட் பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில், தலைசிறந்த போராளியான
கிளாரா ஜெட்கின் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
1911இல் இந்த தினம்
முதன்முறையாக வியன்னாவில் கொண்டாடப்பட்டது. 8மணி நேர வேலை என்ற பொருளாதார
கோரிக்கையும் ஓட்டுரிமை என்ற அரசியல் கோரிக்கையும் முன் வைத்து உருவான
உழைக்கும் பெண்கள் தினம்தான் காலப்போக்கில் உலகப் பெண்கள் தினமாக உருமாறி
இன்று அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக பெண்களின் சாதனைகளை கொண்டாடும்
தினமாக உள்ளது.
இறைவனின் அற்புதப் படைப்பு (ஆணும் பெண்ணும்)
இருவருமே சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இதைத்தான் சிவன் பாதி,
சக்தி பாதி என்று புராணங்கள் கூறுகின்றன. அரசியல் சாசனம் மகளிருக்கு சம
உரிமை வழங்கியிருக்கிறது.
“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள்
செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே
பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று பாடினான் மகாகவி பாரதி.