காய் மற்றும் பழங்களின் பயன்கள்




*******************************************************************************                                       
                                     சுண்டைக்காயின் பயன்கள்
 
நம் கண் முன்னால் சிறிய மற்றும் பெரிய செடியாக காணப்படும் தாவரங்களில் ஒன்று சுண்டை. இது ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. சுண்டைக்காய் சிறிது கசப்பு சுவை கொண்டது.
இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.





சுண்டைக்காயை மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து.
 
சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, என முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இது உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை சாப்பிடுவதால்  இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.

இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம். சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும்.
சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.


********************************************************************************


                                 பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்:-

1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

 3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.



7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
 8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.


 *******************************************************************************

                                          வெள்ளரியின் மகிமை
நம்மி்ல் பலருக்கும் வெள்ளரி சாப்பிடப்பிடிக்கும். பிஞ்சு, காய் என்று இரு வகை உண்டு. மருத்துவக் குணங்கள் நிறைந்தது வெள்ளரி. இது ஒரு நல்ல நீரிளக்கி. செரிமானத்துக்கு உதவுவது. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தை தணித்து குடலுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. சிறுநீரக கோளாறை சரிசெய்கிறது. தலை சுற்றலை தடுக்கிறது. சமீபத்திய ஓர் ஆய்வின்படி மூட்டு வீக்க நோய்களை வெள்ளரி குணமாக்குகிறது. எனவே வெள்ளரி ஒரு முக்கிய காய்கறி வகை என்று கூறலாம். வெள்ளரியில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் பருமனைக்குறைக்க விரும்புவோருக்கு நல்லது. வெள்ளரிச்சாறுடன் விதைகளையும் சேர்த்துச்சாப்பிட்டால் நல்ல பலன்கள் ஏற்படும். கீல் வாதத்தை போக்கவும் இது உதவுகிறது. சிறுநீரகத்துக்கும் நன்மை புரிகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் பருமனைக்குறைக்க விரும்புபவர்களும் வெள்ளரிப்பிஞ்சுகளை அதிகமாக சாப்பிடுவது நன்மை பயக்கும்.