நல்ல தமாஷ்


 ஒரு தனியார் வங்கியில் நடந்த சம்பவம்.
நான் மற்றும் இதர வாடிக்கையாளர்களும் காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்திருந்தோம். அப்போது நாற்பது வயது மதிக்கத்தக்க கதர் வேட்டி சட்டைக்காரர் ஒருவர், தனது நரை கலந்த மீசையை முறுக்கியபடி வங்கிக்குள் நுழைந்தார். சுற்றும் முற்றும் பார்த்தவர், ஏதோ காணாததைக் கண்டதைப் போல திடுதிடுவென ஓடி மேனேஜரின் அறைக்குள் அதிரடியாய் நுழைந்து அவரை தரதரவென இழுக்காத குறையாய் இழுத்து வந்து, அங்கிருந்த ஒரு வங்கி அறிவிப்பைக் காட்டி,

"இதப் படிங்க சார்" என்றார்.

மேனேஜர் தயங்கியவாறே தனது கண்ணாடியை சரி செய்து கொண்டு,

"மூத்த குடி மக்களுக்கு வைப்புநிதி வட்டி விகிதம்..." என்று அந்த அறிவிப்பை முழுவதும் படித்தார்.

"அதுல மூத்த குடி மக்களுக்குன்னா போட்டிருக்கு?"

"ஆமா!" என்றார் மேனேஜர் பெருமிதமாக ஒரு டெபாசிட் கிடைச்சிருச்சு என்கிற சந்தோசத்தில்.

"அப்பச் சரிங்க சார். பாருங்க எங்கப்பாருக்கு ஒரே குடிதானுங்க. எளைய குடியெல்லாம் கிடையாதுங்க. மூத்த குடியில எங்கப்பாருக்கு நான் மூத்த மகனுங்க. அப்ப எனக்கும் அதே வட்டி போட்டுக் குடுங்க சார்..." என்றார் கதர்காரர்.

நான் உள்பட வங்கியே சிரிப்பலையில் இருக்க, மேனேஜர் சிறிது நேரம் குழப்பத்தில் அவரையும், அந்த அறிவிப்பையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு,

"அதுல ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்னு நெனைக்கிறேன்" என்றவாறே பியூனை அழைத்து அந்த அறிவிப்பை நீக்கினார்.

சிறிது நேரம் கழித்து வேறொரு அறிவிப்பை ஒட்டிவிட்டு அந்த கதராடைக்காரரை அழைத்து அதனைப் படித்துக் காட்டினார்.

"மூத்த குடிமகன்களுக்கு..." என்றிருந்தது.

"அப்பச் சரிங்க சார். பாருங்க எங்கப்பாருக்கு நான் மூத்த மகனுங்க. இருவத்தினாலு வருசமா குடிக்கிறேனுங்க. எந்தம்பி இருவது வருசமா குடிக்கிறாருங்க. நான் மூத்த குடிமகன் தானுங்க. இப்ப அந்த வட்டி நமக்கு கெடைக்குமுங்களா?" என்றார்.

மேனேஜர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். சில நிமிடங்களில் அந்த அறிவிப்பு ஆங்கிலத்திற்கு மாறியது.

யேப்பா சீனியர் சிட்டிசன்ஸ், உங்க காமெடி சென்சுக்கு ஒரு அளவேயில்லையா?
********************************************************************************

 மாதம் முழுவதும் ஊரைச் சுற்றினாலும் தண்டச்சோறு என திட்டுவதில்லை டூரிஸ்ட் கைடாக இருப்பவரை
************************************
உங்க செல்லுக்கு என் அட்ரஸ் அனுப்பியிருக்கிறேன். என்னோட அட்ரசுக்கு உங்க செல்ல அனுப்பமுடியுமா?
**********************
ரேஷன் கார்டுக்கெல்லாம் இப்படி ஃபுல் சைஸ்ல மாடலிங் போஸ் கொடுக்குற போட்டோவைத் தரக்கூடாதும்மா...


எங்க தம்பி பயங்கரமா ஓடுவான். அமெரிக்கா எல்லாம் போயிருக்கான்.
ஓடியே வா?

என் மருமகள் அக்கிரமம் தாங்க முடியல
என்ன பண்றா...

என்னைப்பார் சிரின்னு வாசல் கதவுல எழுதி அதுக்கு மேலே நான் சிரிக்கிற மாதிரி இருக்கிற போட்டோவை மாட்டி வச்சிருக்கா...

ஒருவர்  : கோயில் கட்ட 500 ரூபா போதுமா?
மற்றவர் : முதல்ல உண்டியல்தான் வைக்கறேனுங்க... அப்புறம் தான் சிலையெல்லாம் அதனால் இப்போதைக்கு இது போதும் ....