வன உயிரினம் - தாவரங்கள்



**************************************************************************

வேம்பு அதாவது வேப்பமரம்
 

இதன் தாவரவியல் பெயர் அசாடிரக்டா இன்டிகா (Azadirachta indica) என்பதாகும். இதன் தாவரக்குடும்பம் மீலியேசி (Meliaceae). வேப்ப மரம் இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி இதனை ஒரு மூலிகை தாவரம் என்றும் கூறலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடாத தன்மை கொண்டது என்று கருதப்படுகின்றது. வேப்பம் பூவிலிருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் போன்றவை செய்யலாம். வேப்ப எண்ணெய் மிகுந்த மருத்துவ குணமுடையது.

 வளரியல்பு :

இந்தியா முழுவதும் பரவி காணப்படும். ஜூன் – ஜூலையில் கனிகள் உருவாகும். மார்ச்சு – ஏப்ரலில் பூக்கள் பூக்கும். பல்லாண்டு வாழும் மரம் இது. கருவேம்பு, நிலவேம்பு, மலைவேம்பு, சர்க்கரை வேம்பு எனப் பல வகைகள் இருந்தாலும், கருவேம்பையே பொதுவாக வேம்பு எனக் கூறப்படுகிறது. ஏறக்குறைய 400 ஆண்டுகள் வரையிலும் முதிர்ந்து வளரும் தன்மைக் கொண்டது.

பயன்கள் :

இதன் எண்ணெய் உணவுக்கும், விளக்கெரிக்கவும், தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலை முக்கியமாகக் கொசு விரட்டியாகப் பயன்படுகிறது. இயற்கை பூச்சுக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. இலையை அரைத்துக் களிம்பாக்கிப் புண்களை ஆற்றவும், கட்டி வீக்கங்களைக் கரைக்கவும் வைத்துக் கட்டுவார்கள். பட்டை ஜுரத்தைப் போக்கவும் பயன்படுகிறது. எண்ணெய் மூலம், பலவீனம், கருத்தடை, தோல்நோய்கள், குஷ்டம், மூட்டுவலி, பொடுகு, புண், அம்மை, புற்றுநோய், பாம்புக்கடி ஆகிய பிரச்சினைகளுக்குப் பயன்படுகிறது. 



***********************************************************************



                                                          மாநில மரம்

தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரமாகும். இதன் அறிவியல் பெயர் பொராசஸ் பிலாபெல்லிபர் ஆகும். தற்போது இம்மாநில மரமானது அழிந்து வரும் பாரம்பரியங்களில் ஒன்றாக வருகிறது. இதற்கு காரணம் இதன் நன்மைகளை நாம் அறியாததேயாகும். 



பனைமரத்திலிருந்து கிடைக்கும் பனை நுங்கு நன்மைகள் பல தரக்கூடியது ஆகும்.  தமிழ்நாட்டின் மாநிலமரமாக இருக்கும் இம்மரத்தை இத்தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறியாமல் இருந்தாலும் அதிலிருந்து கிடைக்கும் பனை நுங்கு ஆரோக்கியத்திற்கு ஏராளமான பலன்களைத்தருகிறது. 

வெயில் காலசூட்டிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்தான் பனைநுங்கு. கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ச்சியை நாடுவோம். நம் உடலுக்கு தேவையான நீர் சத்துக்களை வாரி வழங்குகிறது பனை நுங்கு.

Image result for பனைமரம்

பனைவெள்ளம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம் என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை. பனை நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி மற்றும் சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், டையமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.

பனை நுங்கிற்கு கொழுப்பைக்கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பனை நுங்கை சாப்பிடலாம். பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே பனை நுங்கு மருந்தாக பயன்படுகிறது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் கு்டித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும். 

இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்லமருந்தாகும். நுங்கில் காணப்படும் ஆந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்திகொண்டது. நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும். இப்படி பல நன்மைகளை நமக்கு அள்ளித்தருகிறது பனை நுங்கு.


இத்தகைய ஆற்றல் கொண்ட இம்மாநில மரத்தை பாதுகாத்து இயற்கையை காப்போம் நம் வருங்கால சந்ததியனரை காப்போம்.



*******************************************************************************