இன்று ஒரு தகவல் - கதைகள்

வெற்றிக்குக் காரணம்

வெற்றிகரமான மனிதர் ஒருவரை இன்னொருவர் சந்தித்தார். கேட்டார்.
உங்க வெற்றிக்கு என்ன காரணம்?
என்னுடைய கடந்த கால அனுபவங்கள்
சரி அந்த அனுபவங்களுக்கு என்ன காரணம்?
என்னுடைய கடந்த கால தோல்விகள்
அப்படியென்றால் தோல்விதான் வெற்றிக்குக் காரணம் என்று சொல்கிறீர்களா?
ஆமாம் என்னுடைய கடந்தகால தோல்விகள் தான் என்னுடைய நிகழ்கால வெற்றிகளுக்குக் காரணம்.
இவர்களின் இந்த உரையாடலில் உண்மை இருக்கிறது. அனுபவமும் ஓர் ஆசிரியர்தான் என்று சொல்வார்கள்.
ஆசிரியர் என்பவர் பாடத்தைச் சொல்லிக்கொடுத்து விட்டுப் பரீட்சை வைப்பார்
அனுபவம் என்ற ஆசிரியர் முதலில் பரீட்சையை வைத்து அதன் மூலம் பாடத்தைச் சொல்லிக்கொடுப்பார்.
எனவே வெற்றிக்கு காரணம் தோல்வியே. எனவே தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் அதன்மூலம் கிடைக்கும் அனுபவத்தை கற்றுக்கொள்ளவேண்டும்.
*****************************************************************************
*****************************************************************************
 அன்பின் பெருமை
இந்த உலகத்திலே எல்லாருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு பொருள் எது?
இது ஒரு முக்கியமான கேள்வி
இந்தக்கேள்விக்கு பொருத்தமான ஒரு பதிலை உங்களாலே சொல்லமுடியுமா?
கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க
பணம்ன்னு சொல்லலாமா?
கையிலே காசு இல்லாதவன் கிட்டே ஒரு பத்து ரூபாயைக் கொடுத்தா அது அவனுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். ஏற்கனவே வருமானவரி பிரச்சனையிலே இருக்கிறவர்கிட்டே இன்னும் கொஞ்சம் பணம் இந்தாங்கன்னு சொன்னா... அது சங்கடத்தைத்தான் கொடுக்கும்.
சரி இனிப்புன்னு சொல்லலாமா? சர்க்கரை வியாதிக்காரங்களுக்கு அது என்னா சந்தோஷத்தையா கொடுக்கும்?

ஆக... எல்லாருக்கும் வேறுபாடு இல்லாம சந்தோஷத்தை கொடுக்கக்கூடியது வேற ஏதோ ஒன்று இருக்கு
அது என்னான்னு கண்டுபிடிப்போம். அதுதான் இன்னைக்கு தகவல்.
அதைக் கண்டுபிடிக்க இந்த கதையை கேளுங்க
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கும் இதே சந்தேகம் வந்துட்டுது அதாவது எல்லாருக்கும் இன்பம் தரக்கூடிய பொருள் எது? ன்னு
இதுக்கு பதில் தெரிஞ்சிக்க ஆசைப்பட்டார்
சரி.. அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சார். நாட்டு மக்களுக்கு பகிரங்கமா ஒரு அறிவிப்பு கொடுத்தார். நம்ம நாட்டு மக்கள் இன்பம் தரக்கூடிய பொருள் எதுன்னு நினைக்கிறாங்களோ அதைக் கொண்டுவந்து அரண்மனையிலே உள்ள கண்காட்சி மண்டபத்திலே வைக்கலாம். அப்படி அவங்க வைக்கிற பொருள்களில் எது எல்லாருக்கும் இன்பம் தரக்கூடியதா இருக்குமோ அதை வச்சவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு ... அப்படின்னு அறிவிச்சிட்டார்
ஜனங்கள் இந்த அறிவிப்பைக் கேட்டாங்க. சும்மா இருப்பாங்களா? ஆயிரம் பொற்காசுகளாச்சே சும்மாவா? அவங்கவங்க கையில என்னன்ன கெடச்சுதோ அதையெல்லாம் கொண்டாந்து அரண்மனை காட்சி மண்டபத்திலே வைச்சுட்டாங்க. அதுக்கப்புறமா... ராஜா அங்கே வந்தார். ஒவ்வொண்ணா பார்த்துக்கிட்டே வந்தார். முதல்லே ஒரு குயில் இருந்தது. இனிமையா பாடக்கூடிய குயில். இந்தக்குயிலோட இன்னிசை எல்லோருக்கும் இன்பம் தரக்கூடியதுதான் இருந்தாலும் காது கேளாதவர்களுக்கு இந்த இசை எப்படி இன்பம் தரமுடியும்? ஆக இது சரியில்லேன்னுட்டார் ராஜா
அடுத்தப்படியா போனார். என்ன வச்சிருக்காங்கன்னு பார்த்தார்.
ஒரு அழகான மயில் அங்கே தோகை விரிச்சி ஆடிக்கிட்டு இருந்தது.
இந்த மயிலோட ஆட்டம் மனசுக்கு இன்பம் தரக்கூடியதுதான்... இருந்தாலும் பார்வையற்றோர் இந்த ஆட்டத்தைப் பார்த்து ரசிக்கமுடியாதே .. அதனாலே இதுவும் சரியில்லைன்னுட்டார்
அதுக்கு அடுத்தபடியா போனார்
பலவகையான இனிப்புப் பண்டங்களை வச்சிருந்தாங்க அதைப்பார்த்தார். வயசானவங்களுக்கும் நோயாளிகளுக்கும் இது இன்பம் தராது துன்பம் தான் கொடுக்கும்ன்னார்.
இப்படியே பார்த்துக்கிட்டே போனார். அழகான மலர்கள் - கனிகள் - ஓவியங்கள் .... எதுவும் பொருத்தமா தெரியலே சகலபேருக்கும் இன்பம் தரக்கூடிய வகையிலே எதுவுமே இல்லை
கடைசியா வந்தார். அங்கே ஒரு களிமண் பொம்மை இருந்தது. அது என்ன பொம்மைன்னா பசியாலே வாடியிருக்கிற ஒருத்தருக்கு ஒரு அம்மா இனிமையா பேசிக்கிட்டு சோறு போடறது மாதிரி அந்த பொம்மையை செஞ்சிருந்தாங்க அதுக்குக்கீழே அன்பு ன்னு எழுதியிருந்தது
ராஜா பளிச்சின்னு ஒரு முடிவுக்கு வந்தார். அந்த பொம்மையை செய்த சிற்பியை வரவழைச்சார். பரிசு கொடுத்தார். அன்பு ஒண்ணுதான் எல்லாருக்கும் இன்பம் அளிக்கக்கூடிய பொருள். காது கேளாதவர்களும்  அதைக்கேட்கமுடியும். பார்வை இல்லாதவர்களும் அதைப்பார்க்கமுடியும். குழந்தைகளும் அதை உணரமுடியும் அப்படின்னு அதுக்கு விளக்கம் கொடுத்தார் ராஜா. இந்த உலகத்திலே எல்லாருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு பொருள் அன்புதான். நாம அத புரிஞ்சி நடந்துக்கவேணும்.